My Account Login

சேரிகளின் பேராயர் நீதிக்கான குரல் - போப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மாற்றம்தரும் போப்பாட்சி - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

ஏழைகளுக்கு உதவுவது பற்றிப் பேசியவர் மட்டுமல்ல, எளிய வாழ்க்கைமுறைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தவர்

COLOMBO, SRI LANKA, April 25, 2025 /EINPresswire.com/ --

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களின் வாழ்வைக் கொண்டாடுகிறது. உலகெங்கிலும் ஒடுக்கப்பட்டவர்கள், ஏழை எளியவர்கள் பால் தனிக் கவனம் கொண்ட போப் பிரான்சிஸ் பொருளியல் நீதியையும் சமூக நீதியையும் நிலைநாட்டப் பாடுபட்டார். உரிமை குன்றியவர்களுக்கான அவரது ஆழ்ந்த உறுதிப்பாட்டுக்குச் சான்றாக அமைப்புசார் வறுமையிலும் ஏற்றத்தாழ்விலும் கவனம் செலுத்தும்படியான கட்டமைப்பு மாற்றங்களை அவர் ஓயாமல் வலிந்துரைத்து வந்தார்.

ஏழைகளுக்கு உதவுவது பற்றிப் பேசியவர் மட்டுமல்ல, எளிய வாழ்க்கைமுறைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தவர், போப்பரசர்
சுகபோகங்களை மறுதலித்தவர், “ஏழைகளுக்கான ஏழைத் திருச்சபை” வேண்டுமென்று குரல் கொடுத்தவர். இக்கட்டில் இருப்போருக்கு உதவும்
பொருட்டு அடிக்கடி உலகெங்கும் எழ்மைப்பட்ட பகுதிகளுக்குச் சென்று “சேரிகளின் பேராயர்” என்று பெயரெடுத்தவர். சிறைக்கைதிகளுக்கும்
ஊனமுற்றவர்களுக்கும் கால்கழுவி விட்டு சர்ச்சைக்குக் காரணமானார். அதேபோது குருமார்கள் தாங்கள் சேவையாற்றும் சமுதாயங்களை
முழுமையாகத் தழுவிக் கொள்ள வேண்டும் – “மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளின் வாசம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்” - என்றார்.

போப் பிரான்சிஸ் குடிபெயர்ந்தோரின் துயரம் குறித்துத் தனி அக்கறையோடு குரல்கொடுத்தவர். அகதிகளுடன் அவர் கொண்ட உறுதியான தோழமை என்பது தேச மூலமும் ஆவணத் தகுநிலையும் கருதாமல் ஒவ்வொரு மாந்தர்க்கும் உரிய உள்ளார்ந்த கண்ணியத்தில் அவர் கொண்ட நம்பிக்கையிலிருந்து விளைந்ததாகும். 2015ஆம் ஆண்டு குடிபெயர்தல் தொடர்பான பெரும் சவால்களுக்கு ஐரோப்பா முகங்கொடுக்க நேரிட்ட போது அவர் அதனை அறவியல் வினாவாக வனைந்து, உயிருக்கு ஆபத்தான இடர் காண்பவர்கள் ஐரோப்பாவில் பாதுகாப்பான புகலிடம் பெற வேண்டுமென அயராது வலிந்துரைத்தார். போப் பிரான்சிஸ் அவர்கள் குடிவரவுத் தகுநிலையை குற்றத்தன்மையோடு இணைத்துப் பேசுவதைக் கண்டித்ததோடு, பெருந்திரளாக நாடுகடத்துவதை எதிர்த்தும் பேசினார் – இது ”திரளான ஆண் பெண்களின் கண்ணியத்தையும், முழுக் குடும்பங்களின் கண்ணியத்தையும் மீறுவதாகும்” என்றார்.

போப் பிரான்சிஸ் அவர்களின் பார்வையில் சூழலியலும் பழைமைக் காப்பும் அறமும் சமயமும் சார்ந்த சிக்கலாகும். 2015ஆம் ஆண்டு முழுக்க முழுக்க சூழலியல் கவலைகளுக்கென்றமைந்த முதல் போப்பாட்சி ஆவணமாகிய ”புகழ் உமதே” எனும் புதுவழி காட்டும் சுற்றுமடலை அவர் வெளியிட்டார். இந்த மைல்கல் ஆவணம் சூழலியல் சீர்கேட்டை சமூக அநீதியுடன் தொடர்புபடுத்தியதோடு, சூழலியல் சீர்கேடு எவ்வாறு மிகமிக ஏழ்மைப்பட்ட உலக மக்களைத் தகவுமீறி வாட்டுகிறது என்பதை அறிந்தேற்கும் “ஒருங்கிணைந்த சூழலியல்” தேவை என்பதைக் காட்டிற்று. இந்தச் சுற்றுமடல் கத்தோலிக்க சமூகச் சிந்தனையைப் புரட்சியமாக மாற்றியமைத்து, “நமது பொது இல்லத்தின்” பால் கவனம் என்பதை உயிருக்குயிரான அறக் கடமையாக நிறுவி, சூழலியல் மேற்பார்வை பற்றிச் சமயங்களிடையே உலகளாவிய உரையாடலுக்கு உத்வேகமளித்தது. போப் பிரான்சிஸ் சொன்னார்: “நமது இல்லம் மென்மேலும் பெரியதோர் ஊத்தைக் குவியல் போல் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது. நெருக்கடிக்கு முகங்கொடுக்கத் தேவையான பண்பாடு இன்றளவும் நமக்கில்லை என்பதுதான் சிக்கல். புதிய பாதைகள் வகுக்க வல்ல தலைமை நமக்கில்லை. அழிவுநாள் நெருங்கி விட்டது என்ற ஆருடங்களை இனியும் நக்கல் நையாண்டியாக அலட்சியப்படுத்த முடியாது.”

வரலாற்று வழிப்பட்ட வன்குடியேற்றத்தையும் புதுமக் காலத்துக்குரிய காலனிய ஆதிக்கத்தையும் கடுமையாகக் குறைகூறி வந்த போப் பிரான்சிஸ் 15ஆம் நூற்றாண்டு போப்பாட்சிக் கட்டளையால் முன்வைக்கப்பட்ட “கண்டுபிடிப்புக் கொள்கையை” வத்திக்கான் மறுதலிக்க வழிகாட்டினார். ஒருமுறை கனடா சென்ற போது அந்நாட்டின் தொல்குடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டார், திருச்சபையின் உறைவிடப் பள்ளித் திட்டத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.

1994இல் ருவாண்டா இனவழிப்பு நடந்த போது திருச்சபைத் தலைவர்கள் மௌனம் காத்தமைக்காகவும் வருத்தம் தெரிவித்தார்.

போப் பிரான்சிஸ் உலகத் தலைவராகத் திகழ்ந்தவர். தென்பாதி உலகில் கவனம் குவிப்பதில் குறியாக இருந்தவர். இதற்குக் கல்கத்தாவில் தொண்டு
செய்த அன்னை தெரெசாவை அவர் புனிதராக்கிச் சிறப்பித்தமையே சான்று. வத்திக்கான் வல்லுநர் ஜான் எல். அலன் இளையர் சொன்ன கருத்து: ”ஒரு
காலத்தில் நேட்டோவின் குருபீடமாக இருந்த போப்பாட்சி இப்போது பிரிக்ஸ் அமைப்பின் குருபீடமாகி விட்டது.”

பெரும்புகழ் சுமந்தவரை இழந்து மனித குலம் வருந்தும் போதே, போப் பிரான்சிஸ் விட்டுச் சென்ற மரபு அவர் குடிகொண்ட எண்ணற்ற உயிர்களில்
வாழ்கிறது.

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Visuvanathan Rudrakumaran
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
r.thave@tgte.org
Visit us on social media:
LinkedIn

Facebook
Twitter

View full experience

Distribution channels: Human Rights, International Organizations, Politics, Religion, World & Regional